மகளிர் மட்டும்

நண்பர்கள் தினம் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா பெண்களுக்கு இல்லையா. பள்ளி,கல்லூரி வரை தொடர்ந்த நட்பு திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்தவுடன் காணாமல் போவது ஏன் என ஒருவர் கேட்டது சற்று சிந்திக்க வைத்தது.


இந்த நேரத்தில் வைரமுத்துவின் தோழிமார் கவிதை நினைவுக்கு வருகிறது.
சிறுவயதில் ஒன்றாய் ஆடி,ஓடி விளையாடிய இரு தோழிகள்,ஒரே தட்டில் சாப்பிட்டு,ஒரே உடைகளை மாற்றி உடுத்தி,அவளுக்காக இவள் வீட்டில் அடிவாங்கி,ஒத்த குச்சி ஐஸ் வாங்கி ரெண்டு பேர் சாப்பிட்டு, கடைசி வரை இணை பிரயாதிருக்க ஒரே கணவனை திருமணம் செய்தால் என்ன?? என்று கூட யோசித்த தோழிகள் காலத்தின் சூழ்நிலையில் வெவ்வேறு ஊர்களில் திருமணமாகி பிரிந்து செல்வது போல் எழுதியிருப்பார்.அருமையான கவிதை நடை.

கவிதையாய் இருந்தால் கூட இந்த நிலைதான் இங்கு பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது.ஆண்களின் நட்பு வட்டாரம் திருமணத்திற்கு பிறகும் கூட தொடரும் போது பெண்ணாணவள்  தனது நட்பை திருமணத்திற்கு பிறகு தொடராமல்,தொடர முடியாமல் இருப்பது ஏன் என்று பெண்களை விட ஆண்களே சற்று சிந்திக்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தில் கூட, இயக்குனர் அவர்கள் பெண்களின் நட்பை,அவர்கள் இளமைக் காலங்களில் அனுபவிக்க நினைத்த சந்தோசத்தை,மகிழ்ச்சியை திருமணம் முடிந்து வயதாகிய பிறகு அவர்கள் பூர்த்தி செய்வது போல் அழகாக காட்டியிருப்பார்.

ஆனால் திரைப்படங்களில் காட்டி விட்டால் மட்டும் ஆணானவன் தன் மனைவியை,சகோதரியை சுதந்திரப் பறவையாக பறக்க விடுவானா என்றால் மாட்டவை மாட்டான் என்றே சட்டெனப் பதில் சொல்லத் தோணுகிறது.

ஆண் எதற்கு எங்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் நாங்கள் என்ன அடிமையா என்று பெண்ணிசம் கூறிக் கொண்டு வருபவர்கள் யாரும் யாருக்கும் அடிமையில்லை.யாரும் உங்களை கட்டாயப் படுத்தி பூட்டி வைக்கவும் முடியாது.நீங்களே உங்களை குறுகிய வட்டத்துக்குள் அடைத்துக் கொண்டு இருக்குறீர்கள்.

உடைத்து விட்டு வெளியே வாருங்கள் என்பது தான் இங்குள்ள பல ஆண்களின் ஆசைகள்.திருமணம் முடிந்தால் என்ன,பிள்ளைகள் பிறந்தால் தான் என்ன பெத்துக்கொள்ள மட்டுமே கணவனுக்கு வேலையில்லை,அதை வளர்க்கும் பொறுப்பும் அவனுக்கு உண்டு.அனைத்தையும் பகிர்ந்து செய்யுங்கள்.

பள்ளி தோழிகளிடம் மனம் விட்டு பேசுங்கள்,அதற்கு முதலில் அவர்களைத் தேடிப் பிடியுங்கள்.நலம் விசாரியுங்கள்.பழைய கதைகளை புரட்டி எடுங்கள்.அந்தகால அர்ப்பமான காமெடிகளை இப்போது நினைத்து வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்து மகிழுங்கள்.கணவனுக்கு காலாண்டு விடுமுறை கொடுத்து அம்மா வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.

தோழிகளின் வருகைப் பதிவேடு எடுங்கள்.வராதவர்களை வீட்டுக்கே சென்று இழுத்து வாருங்கள்.பிடித்ததை சமைத்து கூட்டாஞ்சோறு சாப்பிடுங்கள்.

மீண்டும் குழந்தையாகிப் போங்கள்!!!