புத்தாண்டு ஸ்பெஷல் காடை பிரியாணி

கிறிஸ்துமஸ்ஸைத் தொடர்ந்து புத்தாண்டு வந்துவிடும். கடந்த ஆண்டில் எதையெல்லாம் செய்ய நினைத்தோமோ அதைச் செய்துமுடித்தோமா இல்லையா என்பதைப் பற்றிய சிந்தனை ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் புத்தாண்டுக்குப் புதிதாக என்ன சமைக்கலாம் என்ற சிந்தனை இன்னொரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கும்.

அந்தச் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகப் புதுப்புது உணவு வகைகளுடன் வந்திருக்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. புத்தாண்டு அன்று செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்க அவர் கற்றுத்தருகிறார்.


காடை பிரியாணி

என்னென்ன தேவை?

காடை - 4
சீரகச் சம்பா அரிசி – 3 கப்
வெங்காயம் - 4
தக்காளி – 3
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 15
தயிர் - கால் கப்
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடலை எண்ணெய் - 2 குழிக்கரண்டி
நெய் - 1 குழிக்கரண்டி
பட்டை - 4 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 5
பிரிஞ்சி இலை - 1
கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா – தலா 1 கைப்பிடியளவு

எப்படிச் செய்வது?

காடையைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கழுவிக்கொள்ளுங்கள். சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். காய்ந்த மிளகாயைத் தண்ணீரில் ஊறவைத்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடானதும் நெய், கடலை எண்ணெய் இரண்டையும் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளியுங்கள். வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது இரண்டையும் சேர்த்துச் சிவக்க வதக்குங்கள்.

நன்றாக வதங்கியதும் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலவை நன்றாகக் கரையும்வரை வதக்குங்கள். புதினா, கறிவேப்பிலை, மல்லித் தழை, அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

அதில் காடையைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி ஊறவைத்துள்ள அரிசியைச் சேர்த்துக் கிளறி ஐந்தேகால் கப் தண்ணீரைச் சேருங்கள். உப்பு சரிபார்த்துக் கொதிக்கவிடுங்கள். பத்து நிமிடம் கொதிக்கவிடுங்கள். தோசைக்கல்லை அடுப்பில் வைத்துத் தீயை மிதமாக்கி அதன் மீது பிரியாணி பாத்திரத்தை வைத்துத் தட்டால் மூடுங்கள். மூடியின் மீது சூடான தண்ணீர் பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் 20 நிமிடங்கள் தம் போட்டு இறக்குங்கள்.