காலத்தை வென்ற திரைக்காவியம் திருவிளையாடல்

#திருவிளையாடல்’ 1965 ஜூலை 31 அன்று வெளியிடப்பட்டது. சென்னையில் திரையிடப்பட்ட சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி ஆகிய மூன்று திரையரங்குகளிலும் 25 வாரங்களைக் கடந்து இப்படம் வெள்ளிவிழா கொண்டாடியது. தமிழகம் முழுவதும் இது வசூலை வாரிக்குவித்தது. புராணப் படங்களில் அதுவரை பார்த்தறியாத புதிய உத்திகளை இப்படத்தில் ஏ.பி.என். கையாண்ட விதம், படம் முழுவதும் பாத்திரங்களின் மூலம் வெளிப்பட்ட வளமான தேன் தமிழ் வசனம், கவிஞரின் கருத்தாழம் மிக்க பாடல்கள், கே.வி. மகாதேவனின் காலத்தை வென்ற இசை, கங்காவின் அற்புதமான அரங்க அமைப்புகள், கே.எஸ். பிரசாத்தின் தேர்ந்த படப்பிடிப்பு, சிவாஜி – சாவித்திரி – நாகேஷ் – பாலையா ஆகிய நால்வரின் இணையற்ற அரிய நடிப்பு, டி.ஆர். மகாளிங்கம், கே.பி. சுந்தராம்பாளின் பங்களிப்பு என்று பல்வேறு சிறப்பம்சங்கள் ஒன்றாகச் சேர்ந்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியதால் ‘திருவிளையாடல்’ ஒரு திருப்பு முனைப் படமாக அமைந்தது. இப்படத்தின் வியக்கத்தக்க வெற்றிக்குப் பின்பு சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட் செல்வர், திருமால் பெருமை, காரைக்கால் அம்மையார் போன்ற படங்கள் ஏ.பி.என். இயக்கதில் தொடர்ந்து உருவான போதிலும் ‘திருவிளையாடல்’ போன்று எதுவும் பூரண நிறைவைத் தரவில்லை என்பதுதான் நிஜம். நாகராஜனின் புராணப் படங்களில் திருவிளையாடலும், சமூகப் படங்களில் தில்லானா மோகனாம்பாளும், அவரே நினைத்திருந்தாலும் மீண்டும் எட்ட முடியாத உயரத்தில் போய் நின்று விட்ட நிகரற்ற கலைப் படைப்புகள்.

‘திருவிளையாடல்’ படத்தின் முதற்காட்சியே மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தரக்கூடியது. கயிலாய மலைக்குரிய காட்சி அமைப்பு, சீர்காழியின் ‘சம்போ மகாதேவா’ என்று எழும் கம்பீரமான குரல், தேவ மகளிரின் கலை நயத்துடன் கூடிய ஆடல், கே.வி. மகாதேவனின் கந்தர்வகான வீணை இசை, மத்தளங்களின் முழக்கம், வானுலகச் சூழல், சுசீலாவின் ஆன்மாவுக்குள் ஊடுருவிப் பரம்பொருளைக் கண்டெடுக்கும் ‘நமசிவாய வாழ்க’ என்னும் திருவாசகப் படால், இப்படி இருந்தால்தான் பார்வதி’ என்று நம்மை நினைக்க வைக்கும் சாவித்திரியின் முக பாவம், ஈசனைக் கண்முன் நிறுத்தும் சிவாஜியின் திருக்கோலம் அனைத்தும் எளிதில் மறக்க முடியாதவை. இந்த முதற் காட்சியிலேயே நம்மையறியாமல் படத்துடன் ஒன்றிவிடும் ரசவாதம் நிகழ்ந்துவிடுகிறது. அடுத்த காட்சியில் ஔவையாராக வரும் கே.பி. சுந்தராம்பாள் ஞானப் பழம் கிடைக்காத விரத்தியில் கோபத்துடன் புறப்படும் குமரன் முன் நின்று, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாடலைப் பாடும்போதும், கவிஞரின் ‘பழம் நீயப்பா’ என்ற பாடல் வரிகளுக்கு இறவாத வரத்தைத் தன் அமிழ்தினும் இனிய அற்புதக் குரலால் வழங்கும்போதும் மயங்கி நின்றது முருகன் மட்டுமல்லை; நம் மனங்களும் கூடத்தான்!

திருவிளையாடற் புராணத்தில் வரும் கதைகளை அப்படியே பின்பற்றிப் படமாக்காமல் தன்னுடைய கற்பனைச் சரத்தை அதிகமாகவே ஏ.பி.என். கலந்து கொடுத்திருக்கிறார். தருமி பொற்கிழி பெற்றது. தட்சனின் யாகம், மீனவப் பெண்ணை மணத்தல், ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அடக்குதல் என்று நான்கு பகுதிகளை வெட்டியெடுத்து ஒட்டித் தயாரிக்கப்பட்ட திருவிளையாடல் படத்தை வெற்றிப் பாதையில் வலம் வரச் செய்ததும், தமிழ்த் திரைப்படங்களில் இதற்கு ஓர் தனித்த முக்கியத்துவத்தைத் தேடித் தந்ததும் தருமி, ஹேமநாத பாகவதர் ஆகிய இரண்டு பாத்திரப் படைப்புகள்தாம். தருமியாக நாகேஷூம், ஹேமநாதனாக பாலையாவும் நடித்தது போன்று நடிப்பதற்கு இன்னொரு நகைச்சுவை நடிகரையோ, குணச்த்திர நடிகரையோ தேடிப் பார்த்தாலும் கிடைப்பதரிது.

‘நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி’ என்ற அறிவிப்பு வழங்கப்படும் காட்சியில் தொடங்குகிறது நாகேஷின் வரலாற்றுச் சாதனையை திகழ்த்திய நடிப்புப் படலம். வறுமையில் வாடிக் கிடக்கும் ஓர் ஏழைப் புலவனின் தோற்றத்திற்கு நாகேஷின் உடல்வாகு ஒத்துழைக்கிறது. ‘ஆயிரம் பொன்னா? ஐயோ, நான் என்ன பண்ணுவேன்? யாரைக் கேட்பேன்? இந்த நேரம் பார்த்து எனக்குப் பாட்டெழுத வரவில்லை’ என்று அங்கலாய்ப்பதும், வறுமை தீர வழியில்லையே என்று புலம்புவதுமாக நாகேஷ் நடிக்கும் காட்சியில் அவருடைய அங்கங்கள் அனைத்தும் வியத்தகு பாவங்களை வெளிப்படுத்தும் விதத்தை, ஓடுவதும், நிற்பதும், நிலைகொள்ளாமல் தூணில் சாய்வதுமாக அவர் புலம்பும் அழகை அப்படியே வெளிப்படுத்த எந்த வார்த்தைக்கும் வலிமை இல்லை.

பட்டுடுத்திய, அணிகலன்கள் பூண்ட செல்வச் செழிப்புள்ள புலவனாக வரும் சிவாஜியும், வறுமையோடு போராடுவதே வாழ்க்கையாகிவிட்ட ஏழைப் புலவனாக நாகேஷூம் சந்திக்கும் காட்சியில் நாகராஜனின் தேன்தமிழ் வசனம் கொஞ்சி விளையாடுகிறது. ‘சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் கூட்டிச் சுந்தரத் தமிழினில் பாட்டிசைத்துச் செய்தமிழ்க் கவிபாடும் புலவன் நான்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சிவாஜியின் பாடல் புனையும் ஆற்றலைப் பரிசோதிக்க நாகேஷ் முயலும் காட்சியிலிருந்து, நக்கீரனும் சிவனும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் காட்சி வரை சிவாஜி – நாகேஷ் இருவர்தம் நடிப்போடு, நாகராஜனின் தமிழ்நடை தனியாகக் கொடி கட்டிப் பறக்கிறது. ‘பிரிக்க முடியாதது என்னவோ? தமிழும் சுவையும்! பிரியக்கூடாதது? எதுகையும் மோனையும்! சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்! சேராதிருப்பது? அறிவும் பணமும்! சொல்லக்கூடாதது? பெண்ணிடம் இரகசியம்! சொல்லக்கூடியது? உண்மையின் தத்துவம்! பார்க்கக் கூடாதது? பசியும் பஞ்சமும்! பார்த்து ரசிப்பது? கலையும் அழகும்! கலையிற் சிறந்தது? இயல் இசை நாடகம்! நாடகம் என்பது? நடிப்பும் பாட்டும்! பாட்டுக்கு? நாரதன்! வீணைக்கு? வாணி! அழகுக்கு? முருகன்! சொல்லுக்கு? அகத்தியன்! வில்லுக்கு? விஜயன்! ஆசைக்கு? நீ! அறிவுக்கு? நான்!’ என்று தொடரும் காட்சியில் சிவாஜியின் மிகச் சிறந்த வசன உச்சரிப்பும், நாகேஷின் வியப்பைத் தரும் உடல்மொழியும் ஒன்றோடொன்று போட்டியிடுவதைப் பார்த்து ரசித்தவர்கள் பாக்கியவான்கள்.

பாண்டியன் அவையில், தான் கொண்டு சென்று வாசித்த பாடலில் பொருட்பிழை இருக்கிறது என்று தலைமைப் புலவர் நக்கீரன் சுட்டிக் காட்டிப் பரிகசித்த பின்பு, அங்கிருந்து வெளியேறிக் கோயில் மண்டபத்தில் தனியாக அமர்ந்து, ‘எனக்கு வேணும், எனக்கு வேணும். ஆசை, ஆசை, நல்லா உதைக்காம விட்டானுங்களே… இனிமேல் நான் எப்படிப் பாட்டெழுதுவேன்? எந்தப் பாட்டை எழுதினாலும், ‘ஏம்ப்பா, இது உன்னுடையதுதானா? இல்லை வேற யாரோ எழுதியதா? அப்படியில்ல கேட்பானுங்க. எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சே. அவமானமாப் போச்சே! ஏண்டா நீ பரம்பரைப் புலவன்தானே? புதுசா பாட்டெழுதினவனை நம்பலாமா? ஏன்… ஆசை…. ஆயிரம் பொன்… ஏன்… ஏண்டா? இப்படி தனியா புலம்பற அளவுக்கு விட்டுட்டானே! ஏய் புலவா! அவன் வரமாட்டான். அவனை நம்பிப் புலமை போச்சு. இப்ப கத்தி கத்தி தொண்டையும் போச்சு’ என்று தருமி தன் நெஞ்சோடு புலம்பும் காட்சி, நாகேஷின் இமாலய நடிப்புச் சாதனைக்கு ஓர் அற்புதமான காட்சி.

நக்கீரனாக வரும் ஏ.பி. நாகராஜனின் வெண்கலக் குரலும், சிவாஜியின் சிம்மக் குரலும் போட்டிபோட்டுத் தமிழை உச்சரிக்கும் காட்சியை இன்று நினைக்கும்போது ஏக்கப் பெருமூச்சு மட்டுமே மிச்சப்படும். நல்ல தமிழுக்கு இல்கே இடமில்லை என்று நம் கலையுலகப் பிரும்மாக்கள் முடிவெடுத்து நீண்ட காலமாகிவிட்டது. நம்முடைய இளைய தலைமுறையும் நற்றமிழில் உரையாடினால் ஏதோ இனம் புரியாத ஆப்பிரிக்க மொழியைக் காது கொடுத்துக் கேட்பதுபோல் புரியாமல் விழிப்பதை விட மிகப் பெரிய கொடுமை ஒரு தாய்மொழிக்கு வேறெதுவும் இருக்க முடியாது.

‘பாக்களை இயற்ற உன் வாக்கினில் உலவுகிறாளே பாரதி…. அவளுடைய கூந்தலுக்கும் இயற்கையில் மணம் இல்லையா?’ என்று ஈசன் கேட்க, ‘கலைமகள் என்ன, நான் அன்றாடம் வழிபடும் ஈசனுக்கு இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே.. அன்னை மலைமகள்… உடையவள்… அவளுக்கும் கூந்தலில் இயற்கை மணம் இல்லை’ என்று நக்கீரன் ஆணித்தரமாக மறுத்துப் பேச, ‘நக்கீரா! நன்றாக என்னைப் பார்’ என்று நெற்றிக்கண் திறந்து காட்டி ஈசன் அச்சுறுத்த, ‘நீரே முக்கண் முதல்வனாயினும் ஆகுக! உமது நெற்றியில் ஒரு கண் காட்டிய போதிலும் உமது உடம்பெல்லாம் கண்ணாக்கிச் சுட்டபோதிலும் குற்றம் குற்றமே! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்று பெருமிதத்துடன் பிரகடனம் செய்யும் நக்கீரத் துணிச்சல் இன்று ஆள்பவர்க்கு முன்னால் முதுகு வளைந்து நிற்கும் பதவிப் பித்தர்களுக்கு இல்லாமற் போய்விட்டது எவ்வளவு பெரிய அவலம்!

‘திருவிளையாடல்’ படத்தில் இன்றளவும் மறக்க முடியாத பாத்திரம், தருமிக்கு அடுத்து ஹேமநாத பாகவதரின் பாத்திரம்தான். ஆணவம் அனைத்தும் ஒன்றாகத் திரண்டு வடிவெடுத்த ஓர் இசைக் கலைஞனை எந்தச் சிரமமும் இல்லாமல், மிக இயல்பாக வெளிப்படுத்திய பாலையாவின் ஆற்றல் அளப்பரியது. ‘ஒரு நாள் போதுமா?’ என்ற பாடல் காட்சியில் பாலையா காட்டும் கர்வம் கலந்த பாவங்களும், பாலமுரளியின் அனாயாசமான சங்கீத ஆலாபனைகளும், வீணையும் குழலும் மத்தளமும் வழிந்தோடச் செய்யும் தேன்சுவை இசைப் பெருக்கம் இன்றும் நம் சிந்தையில் நிறைந்து சிலிர்க்கச் செய்கிறது. விறகு வெட்டியாக வரும் சிவாஜியின் பாடலைக் கேட்டு மதிமயங்கிய நிலையில், ‘பாண்டி நாட்டுக்கு என் இசைத் திறமை அனைத்தையும் அடிமையாக்குகிறேன்’ என்று ஓலைச் சீட்டில் எழுதிக் கொடுக்கும் காட்சியில் கணேசனைப் புறம் தள்ளிவிட்டுப் பாலையா தன் நடிப்பால் ஓங்கி உயர்ந்து நிற்கிறார்.

‘திருவிளையாடல்’ படத்தின் திருஷ்டிப் பரிகாரம் தட்சனின் யாகம் சார்ந்த காட்சியமைப்புகள். சிவனும் பார்வதியும் தெருவோரக் குடும்பத்தில் கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொள்வது போல், ‘யாரைவிட யார் பெரியவர்’ என்று போட்டியில் இறங்குவதும், ‘ஆணுக்குப் பெண் அடிமை’ என்று ஆண்டவனே முழங்குவதும் பரம்பொருள் தத்துவத்தையே இழிவுபடுத்தும் சகிக்கவொண்ணாத சிறுமைச் சித்தரிப்புகள். தரம் குறைந்த, ரசக்குறைவான ஒரு நான்காம் தர தெருக்கூத்து பார்ப்பது போன்ற அனுபவம் ஏற்படுவதை அக்காட்சிகளில் நம்மால் தவிர்க்க முடியவில்லை. மீனவப் பெண்ணை மணமுடிக்கும் பகுதியிலும் சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மீனவனாக நடிகர் திலகம் கடற்கரையில் நடந்து வரும் நடையழகைப் பற்றிப் பெரிதாகச் சொல்வார்கள். அதீதமான, சற்றும் இயல்புக்குப் பொருந்தாத சிவாஜியின் சில மிகை நடிப்புகளில் இந்த நடையும் ஒன்று. ‘உன் பாட்டைக் குற்றம் என்று சொல்லிவிட்டார்கள்’ என்று தருமி சொன்னதைக் கேட்டு, அவன் கையைப் பற்றியபடி வேகமாகக் கோயில் மண்டபத்தைக் கடந்து வீறுகொண்ட வேங்கையாக நடிகர் திலகம் நடந்து வரும் நடைதான் உண்மையில் பாராட்டுக்குரியது.
‘திருவிளையாடல்’ படத்தைப் பொருத்த வரை சிவாஜியின் நடிப்பு வழக்கம்போல் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவருடைய சிவநடனம் நம்மை உண்மையில் வியக்க வைக்கிறது. வசனங்களை அவர் உச்சரிக்கும் அழகு ஓர் தமிழாசிரியரை விட நமக்குச் சரியாகத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறது. பல படங்களை நடிகர் திலகம் முழுமையாகத் தன் தோள்களில் சும்ப்பார். ஆனால், ‘திருவிளையாடல்’ படத்தை அவருடன் சேர்ந்து, அவருக்கு இணையாக நாகேஷூம் , பாலையாவும், கே.பி. சுந்தராம்பாளும், டி.ஆர். மகாலிங்கமும், நாகராஜனின் தெள்ளு தமிழ் வசனமும், கவிஞரின் பாடல்களும், மகாதேவனின் மகத்தான சுத்த கர்நாடக இசையும் சுமந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது

அ முதல் அஃகு வரை.