தேங்காய் துருவல் தேன் மிட்டாய்

நன்றி : விகடன் பத்திரிக்கை

``தேனியைத் தவிர வேற எங்கேயுமே இந்தத் தேன் மிட்டாயைப் பார்க்க முடியாது!’ - சுடலைக்கனி

டலைக்கனி பள்ளியின் வாசலில் வந்து காத்திருப்பார் என்று, மாணவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். வகுப்பு இடைவேளை மணி அடித்ததும், வளாகத்திலிருந்து வெளியே ஓடிவரும் மாணவர்களின் கால்கள் நேராக சுடலைக்கனியின் வண்டி முன்பாகத்தான் நிற்கும்.

``ஒரு மிட்டாய் 5 ரூபாய்க்கு விற்கிறேன். பள்ளிக்கூடப் பசங்ககிட்ட மட்டும் காசு பார்க்கிறதில்லை… அவங்க கையில எவ்வளவு கொண்டுவந்தாலும் அதை வாங்கிட்டு மிட்டாய் கொடுத்துருவேன்!” என்று புன்னகையோடு பேச ஆரம்பித்தார் சுடலைக்கனி.

``20 வருஷமா இந்த வியாபாரம் செய்றேன். 25 பைசாவுக்கு விற்க ஆரம்பிச்சேன். இப்போ 5 ரூபாய்க்கு விற்கிறேன். அப்போ சைக்கிள், இப்போ டிவிஎஸ் எக்ஸெல்!” என்று சொல்லும் சுடலைக்கனியின் தேன்மிட்டாய் தேனி மாவட்டத்தில் ஃபேமஸ்! பொதுவாக, மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அதிலும் சுடலைக்கனியின் தேன் மிட்டாய்க்கு, பள்ளிக் குழந்தைகள் முதல் உயர் அதிகாரிகள் வரை தேனி மாவட்ட மக்கள் அனைவரும் அடிமை என்றால், மிகையல்ல!

``வீட்டுக்குப் போய்க்கொண்டிருப்பேன்… வழியில என்னை மறிச்சு, `தேன் மிட்டாய் வேணும்'னு கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அவங்க படிச்ச பள்ளியில நான் தேன் மிட்டாய் விற்றதைச் சொல்லிட்டுப் போவாங்க. சிலர், `ஸ்கூல் படிக்கும்போது சாப்பிட்டது. இப்போதான் உங்களைப் பார்க்கிறேன். ரெண்டு மிட்டாய் கொடுங்க!' என்று வாங்கிச் சாப்பிடுவாங்க. பெரிய பெரிய டாக்டர், வக்கீல், அரசு அதிகாரிகள்கூட என்னை எங்கு பார்த்தாலும் காரை நிறுத்தி, `அண்ணே, ஒரு மிட்டாய் குடுங்க!'னு வாங்கிச் சாப்பிட்டுட்டுப் போவாங்க!

என்னதான் காசு, பணம் இருந்தாலும் என்னைப் பார்த்ததும் மறக்காம, கார்ல இருந்து இறங்கி வந்து என்கிட்ட மிட்டாய் வாங்கிச் சாப்பிடும்போது அவங்க முகத்துல ஏற்படும் மகிழ்ச்சி... அதுதான் எனக்கான எனர்ஜி!'' என்றார் சுடலைக்கனி.

``இந்தத் தேன்மிட்டாய் செய்வது பற்றிச் சொல்ல முடியுமா?''

``பொதுவாக, `குழந்தைங்க மிட்டாய் சாப்பிடக் கூடாது, அதுல கெமிக்கல் கலந்திருக்கும்!'னு சொல்வாங்க. ஆனா, தேனி தேன்மிட்டாயைப் பொறுத்தவரை எல்லாமே இயற்கையானதுதான். அஜீரணக் கோளாறுகளை நீக்கவல்லது. தேனியைத் தவிர வேற எங்குமே இந்தத் தேன்மிட்டாயை நீங்கள் பார்க்க முடியாது.

விறகு அடுப்புல பெரிய சட்டியை வைத்து, நாட்டுவெல்லம் அல்லது நாட்டுக் கருப்பட்டி எடுத்து 1 கிலோவுக்கு 200 மில்லி லிட்டர் அளவுல நீர் விட்டுச் சூடாக்கணும். கருப்பட்டிக் கரைஞ்சதும், நல்ல சாறுள்ள எலுமிச்சம்பழத்தை அதுல பிழிஞ்சுடணும். இளம்சூட்டில் பதமா கலக்கிக்கிட்டே வந்தா, நல்ல நூல் பதத்துக்கு வந்துடும். அதுக்கப்புறம் அகலமான பாத்திரத்துல செக்குல ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை லேசா தடவி, அதை அதுல ஊற்றிக் குளிரவிட்டா போதும். சுவையான தேன்மிட்டாய் ரெடி!

கொஞ்சம்போல தேன்மிட்டாயை எடுத்து ஐஸ்குச்சியில் வெச்சு, நாட்டுச்சக்கரைத்தூள், தேங்காய்த் துருவல் எல்லாத்தையும் மேல தூவிக் கொடுப்பேன். சிலர் `வெறும் தேன் மிட்டாய் போதும்'னு சொல்வாங்க. காலையில வண்டியில தேன்மிட்டாயை எடுத்து வெச்சுக்கிட்டுக் கிளம்பினா, வீட்டுக்கு வர நைட்டாகிடும். தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்களையும், அதற்கு இணையான முன்னாள் மாணவர்களையும் சந்திச்சுட்டு வந்து வீட்டுல படுக்கும்போது, எத்தனையோ மனிதர்களை அவரவரின் கடந்தகால நினைவலைகள்ல மூழ்கடித்த மனநிறைவோடு நிம்மதியா தூங்குவேன்” என்று முடித்துக்கொண்டார்.

``எங்களுக்கும் ஒரு தேன்மிட்டாய் கொடுங்க…” என்று கேட்டு வாங்கிச் சுவைத்ததில், எனக்குள் இருந்த பால்யகால நினைவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக மலரத் தொடங்கின.