2018ல் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தைகள்!!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

2018 ஆம் ஆண்டு தமிழக மக்களால் அதிகமாக உச்சரிக்கப்பட்டவார்த்தைகளை தான் நாம பாக்க போறோம்.!!

ஸ்டெர்லைட்:

தூத்துக்குடி மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளில் ஒன்றான ஸ்டெர்லைட் பிரச்சனை, தமிழக மக்களால சென்ற ஆண்டு அதிக அளவு உற்றுநோக்கப்பட்டது. 100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்துல தமிழக காவல்துறையால நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுல, 13உயிர்கள் கொல்லப்பட்டது தான் மிச்சமே தவிர ஸ்டெர்லைட் எதிர்ப்புக்கு எந்த ஒரு நிரந்தர தீர்வும் இது வரைக்கும் கிடைக்கல.

எட்டுவழிச்சாலை:

மக்களின் விவசாய நிலங்களை அழித்து, அந்த நிலத்தின் மீது ரோடு போட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் அதிமேதாவிகள் உள்ள ஊர் எதுன்னு பாத்தா அது நமது தமிழகம் மட்டும்தான். ஒரு நாட்டின் வளர்ச்சி விவசாயத்தில் மட்டுமே உள்ளது என்பது கூட தெரியாம அதன் மீது மண்ணள்ளி போட்டு எட்டுவழிச்சாலை அமைக்கும் இந்த அரசினை போற்றி புகழ்வோமாக.

மீடு(Metoo):

பொதுவாவே சினிமா துறைகள்ல பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வர்ற நிலையில, சென்ற ஆண்டு மீடூ அப்பிடிங்கிற வார்த்தை பெரும்பாலான மக்களால உச்சரிக்கப்பட்டது. மேலை நாடுகள்ல பாலியல் புகார் கொடுக்க பயன்படுத்துற ஒரு ஹேஸ்டாக்கா வலம்வந்த இந்த வார்த்த, அங்க இருந்து இந்தியாவுக்குள்ள பாலிவுட் தாண்டி தமிழக சினிமாத்துறைகள்லயும் உலாவந்துச்சு. பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மேல பாலியல் புகார் கொடுத்து பரபரப்பான இந்த விசயம் இப்போ இருந்த இடம் கூட தெரியாம போனது வேற விசயம்.

நிர்மலா தேவி:

பாலியல் கொடுமை சினிமா, அரசியல், வட்டாரங்கள் மட்டுமில்லாம கல்லூரி பெண்களுக்கும் அதிக அளவு கொடுக்கப்படுவது சென்ற ஆண்டு கைதான பேராசிரியை நிர்மலா தேவியே உதாரணம். தன்னோட கல்லூரியில படிக்கிற பெண்கள பாலியல் தொழிலுக்கு அழைத்த இந்த பேராசிரியை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், முக்கிய குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியில் திரிவது நமது அரசாங்கத்தின் கேவலமான ஆட்சியையே காட்டுகிறது.

அப்பா எங்கே??:

நீட், இந்த வார்த்தையால நம் சகோதரி அனிதா உயிர் பிரிந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் சென்ற வருடம் கேரளாவில் நீட் எழுத சென்ற மாணவரின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட, தேர்வெழுதிவட்டு வெளியே வந்த மாணவன் கேட்ட "அப்பா எங்கே" என்ற வார்த்தை அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

கலைஞர் மறைவு:

ஆயிரம் நிறை குறைகள் இவர் மீது இருந்தாலும் திராவிட இனத்தின் கடைசி தூண், தென்னிந்தாவியாவின் ஏன் அரசியல் உலகின் முடிசூடா மன்னன், கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துக்கமாகவே சென்றாண்டு இருந்தது.

கஜா புயல்:

இல்லாத கடவுளுக்கு அப்படி என்னதான் கோவமோ நவம்பர், டிசம்பர் மாதங்களின் மீது. வர்தா புயலைத் தொடர்ந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க புறப்பட்டு வந்த கஜா புயல் போகும் போது மொத்த சந்தோசத்தையும் வாரி எடுத்துக்கொண்டு சென்றது. வேதாரண்யம், தஞ்சை, கடலூர் மக்களின் அத்தியாவசியமே கேள்விக்குறியாக்கிய கஜாவை மக்கள் மறக்க சிறிது வருடமாவது ஆகும்.

சபரிமலை:

ஐயப்பனை நாங்களும் வழிபடுவோம் ன்னு பொண்ணுங்க ஒரு பக்கமும், அவரு எங்களுக்கு மட்டும் தான் சொந்தம்ன்னு ஆம்பளைங்க ஒரு பக்கமும் சண்ட போட, அட எல்லாரும் போய் சாமி கும்புடுங்கன்னு கோர்ட்டு தீர்ப்பு சொல்ல, இதான் சாக்குன்னு பொண்ணுங்க குரூப்பா கிளம்பி போக, விட்டாதன பாப்பீங்கன்னு சாமிங்க ரவுண்டு கட்ட, ஒங்க அக்கப்போருக்கு அளவில்லையான்னு அய்யப்பனே கடுப்பாக, 144 தடை உத்தரவு போடுற அளவுக்கு சிறப்பான சம்பவமான அமைஞ்சது சபரிமலை விவகாரம்.

அப்பல்லோ இட்லி:

வருசம் முழுசும் கடுப்பா போனாலும், ஒரே ஒரு இட்லி மேட்டர் தமிழக மக்களையும் தாண்டி ஐ.நா சபை வரைக்கும் ஆச்சரியபட வச்சதுன்னா அது அப்பல்லோ இட்லி தான். "யாருயா அந்த இட்லிய அவிச்சது எனக்கே அவர பாக்கணும் போல இருக்கேயா" இந்த வசனம் தான் சொல்லனும்னு தோணுது ஒரு இட்லி ஒரு கோடின்னு அப்பல்லோ பில்ல பாக்கும் போது.

"ஆக" சென்ற வருடம் 2018 எப்புடி நம்மை சீரும் சிறப்புமாக செய் செய் என செய்ததோ அதேபோல் வரப்போகும் 2019 அதைவிட நம்மை செய்யவேண்டும் என வேண்டிக்கொண்டு விடை பெறுகிறேன்.


#ஸ்டெர்லைட்,#மீடு, #sterllite #metoo #neet #salemeightwayroad #apolloidly #sabarimalaissue