வாக்களிப்பது நம் கடமை

முன்னுரை

   வாக்களிப்பது நம் கடமையா? என்று கேட்டால் நிச்சயமாக, வாக்களிப்பது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட.வாக்களித்தல் என்பது நம் பாரதம் நமக்கு அளித்த உரிமை . அதை முறையாக பயன்படுத்துவது நம் தலையாய கடமை .
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்’ என்ற பாரதியாரின் வரிகள் குறிப்பது எதை? பல உயிர்களை பலி கொடுத்தல்லவா இந்த சுதந்திரத்தைப் பெற்றோம். பலர் வாழ்வு சிறையில் சிதைந்தது இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்திற்காக தானே? யாரோ ஒரு அந்நியனுக்கு அடிமையாயிருப்பதை விட நான் விரும்பும் ஒரு நபர் என் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக பெற்றது தானே சுதந்திரம். அந்த உரிமையைப் பயன்படுத்தாது போனால் அது நம் மடத்தனம் தானே…
இந்தியா ஜனநாயக அந்தஸ்தைப் பெற்று 66 ஆண்டுகள் ஆன பின்பும் நிறைவான ஓட்டு சதவிகிதத்தை அடையாதது வருத்தற்திற்குரிய விஷயம். வரும் 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளப்போவது யார் என்ற விஷயத்தை தீர்மானிக்கப்போவது நாம் ஒவ்வொருவரும் தான் என்பதை உணராத மக்கள் மனநிலை ஒரு முக்கிய காரணம்.
ஏழையோ, படிக்காதவர்களோ, மாற்றுத்திறனாளிகளோ, பெண்களோ யாராய் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்கு 18 வயது நிரம்பி இருக்கிறதா? உங்கள் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உரிமை உங்கள் கையில். நமக்கு அடிப்படை உரிமைகளை வழங்கும் ஜனநாயகத்திற்கு வலு சேக்க கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ஓட்டுகளின் விழுக்காடு ஜனநாயகத்தின் வலிமையை எடுத்துக்காட்டும் கண்ணாடி.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்

ஓட்டெனும் சீட்டு நம்மை ஆளவேண்டியவருக்கு நாம் கொடுக்கும் உத்தரவு. சினிமா தியேட்டர், சீரியல், மதுக்கடை என பல இடங்களில் பொன்னான நேரத்தை வீணாக்கும் நாம் ஓட்டளிக்க கொஞ்சம் நேரத்தை செலவிட யோசிப்போமானால் விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுத தவறியவர்கள் ஆகிவிடுவோம். இந்த உரிமையைப் பல சமயங்களில் பணம், அதிகாரம், சாதிச்செல்வாக்கு, பயமுறுத்தல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால் அது யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல தனக்குத் தானே செய்து கொள்ளும் சதி. ஓட்டுக்கு பணம் வாங்குவது மனசாட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, சட்டப்படி குற்றமும் கூட. ஓட்டுப்போட பணம் வாங்குபவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை என்பது பலரும் அறியாத விஷயம்.வாக்களிப்பது நமது கடமை, உரிமை. அதை விற்கக்கூடாது. அப்படி ஓட்டுக்கு பணம் வாங்குகிறவர்களை நாம் பார்த்தால் அவர்களிடம் வாக்களிப்பது நமது இன்றியமையாத கடமை. அதை நாம் விலைக்கு விற்கக்கூடாது என்று எடுத்துக்கூற வேண்டும். வெறும் ஆயிரம் ரூபாய்க்காக 5 வருடம் எதிர்காலத்தை விற்று விடாதீர்கள். உங்கள் உரிமைக்காக நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், பின்னர் யார் தான் ஓட்டு போடுவார்கள்?

"நான் சுயமாக உழைக்கிறேன், சம்பாதிக்கிறேன் ! அரசின் உதவி எனக்கு என்றுமே தேவையில்லை ! அப்படி இருக்கையில் நான் ஏன் வாக்களிக்கவேண்டும்? ". என்று இருந்திடாமல் அல்லது அவ்வாறு எண்ணும் நண்பர்கள் உடனிருப்பின் அவர்களிடம் வாக்களிப்பதற்கான அவசியத்தைக் கூறி வாக்களியச் செய்யுங்கள். ஏனென்றால், நாம் உபயோகப்படுத்தும் கைக்குட்டையில் இருந்து செயற்கை கோள்கள் வரை அனைத்திலும் அரசியல் மற்றும் அரசாங்கத்தின் பங்கு இன்றியமையாததாகும் .வாக்காளர் என்பது பெருமைக்குரிய விஷயமல்லவா. நான் இந்த நாட்டின் பிரஜை என்று சொல்லிக்கொள்வதில் சந்தோஷம் இல்லையா? எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பது குறிப்பதும் இந்த தார்மீக உரிமையைத்தானே. நியாமான முறையில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு ஓட்டளியுங்கள். பெண்களே நீங்கள் போராடிப்பெற்ற சுதந்திரத்தை வீட்டிலிருப்பவர்களுக்காக விட்டுக்கொடுக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள். காரணம் ஓட்டுரிமை நம் எதிர்காலத்தின் குரல்.ஆகவே, திறமையான ஒரு அரசாங்கம் அமைவதற்கு நாம் வாக்களிப்பது அவசியம் .

நூறு சதவிகிதம் ஓட்டுப் பதிவு
சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை. ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். “எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை,” என்று சொல்லுகிறார்கள்.அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.அதுதான் 49 ஓ அல்லது நோட்டா .

இது, அரசியலில் சற்றும் விருப்பமில்லாமல், "யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?" என்ற குழப்பத்தில் இருப்பவர்களையும் வாக்களிக்க வைத்து 100% வாக்குப்பதிவைப் பெறுவதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது. ஆகவே, அரசியலில் ஆர்வம் உடையவர்கள், தெளிவான முடிவை எடுக்க கூடியவர்களெல்லாம் நோட்டாவைப் பயன்படுத்தாமல் திறமையான ஒரு வேட்பாளருக்கு வாக்களியுங்கள் . ஓட்டுப்போட மறந்துபோனால் வாக்கின் வலிமையை உணராதவர்களாகிவிடுவோம். ஜனநாயகத்தில் மக்களுக்குரிய உரிமை வாக்களிப்பு. அதனால் அதை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை.

முடிவுரை

வாக்கை செலுத்தும் முன் கீழ்கண்ட உறுதி மொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.


*என் வாக்கு உயிருக்கு சமமானது. விலை மதிப்பீடு செய்ய முடியாதது.
* என் வாக்கு என்னை ஆள்பவரை தேர்ந்தெடுக்கிறது.
* என் வாக்கு ஐந்தாண்டு ஆட்சிக்கான அதிகாரம்.
*வாக்களிக்க பணம் வாங்குவது ஒரு ஆண்டு ஜெயில் தண்டனைக்குரிய குற்றம் என்பது எனக்கு தெரியும்.
*என் வாக்கு என் உரிமை, கடமை, பெருமை!
*என் மனசாட்சிப்படியே நான் வாக்களிப்பேன்.
*ஜாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ உந்தப்பட்டு நான் வாக்களிக்கமாட்டேன்.
*நான் வாக்களிப்பது மட்டுமின்றி என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரும் தங்கள் வாக்குரிமையை செல்த்திவிட்டனரா என்று உறுதி செய்து கொள்வேன்.

நல்ல அரசாங்கம் அமைவதற்குக் கண்டிப்பாக வாக்களியுங்கள் ...! ஜெய்ஹிந்த்!!!