காலத்தை வென்ற காவியம் தில்லானா மோகனாம்பாள்

காலத்தை வென்ற திரைக்காவியம் "தில்லானா மோகனாம்பாள்"...



இந்தவார கிளாசிக் மேட்னியில் சனிக்கிழமை மதியம் "தில்லானா மோகனாம்பாள்"ன்னு விளம்பரம் வந்ததும் மனசுக்குள்ளே ஒரு பரவசம். பரதநாட்டிய கலை தொடர்பா பல திரைப்படங்கள் தமிழ் சினிமால வந்தாலும் "தில்லானா மோகனாம்பாளு"க்கு தனி இடம் உண்டு. 1968ல் ரிலீசான தி.மோ 51 வருசமாகியும் இன்னைக்கும் தமிழ்சினிமாவ ஆட்டிப்படைக்குதுன்னா அதுக்கு படத்தோட கதையும், நேர்த்தியான திரைக்கதையும் தாண்டி நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன், நாட்டியப்பேரொளி பத்மினி, பன்முக நடிகர் பாலையா,நகைச்சுவை சக்கரவர்த்திகள் நாகேஷ்,தங்கவேலு,மனோரமா,என்றும் வில்லன் நம்பியார்,இவர்களின் அசகாய நடிப்புகள் என்றில்லாமல் தங்கள் கதாப்பாத்திரமாக வாழ்ந்ததும் படத்தின் வெற்றிக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது. கிளாசிக் படங்களுக்கு இசை என்றாலே ஜாம்பவான் கே.வி.மகாதேவன் என்ற காலகட்டத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்திலும் காலத்தை வென்ற அற்புதமான பாடல்களை அள்ளித் தெளித்திருப்பார்.

"ஆனந்த விகடனில்" கொத்தமங்களம் சுப்புவின் வாழ்க்கைத் தொடர் இதே பெயரில் வெளிவந்ததை அந்த காலத்தில் கிளாசிக் படங்களை எடுத்து பல வெற்றிக்கனிகளை பெற்ற ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் 1968ல் வெளிவந்தது. நாதஸ்வர வித்வான் சிக்கல் சண்முகசுந்தரத்திற்கும், நாட்டிய பெண் மோகனாம்பாளுக்கும் இடையிலான காதலை கலை நயத்துடனும், அழகான இசையுடனும் கொடுத்த ஏ.பி.நாகராஜனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காதல், கலை, இசை, நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் நிறைந்த தி.மோ எந்த காலத்துக்கும் பொருந்தும் அற்புதமான கலைப்படைப்பு. சிவாஜி கணேசன் அறிமுகக்காட்சியில் ஒலிக்கும் நாதஸ்வர இசை இன்றும் பல திருமண வீடுகளில் முதல் பாடலாக ஒலிப்பதில் இருந்தே கே.வி.எம்மின் திறமையை அறியலாம். காதலன் தனது நடனத்தினை ஒளிந்திருந்தி பார்ப்பதனை அறிந்து கதாநாயகி பாடும் பாடலான "மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன"பாடலும், காதலனுக்கு கத்தி குத்து அடைந்ததை பார்த்து அவரின் நலன் விசாரிக்கும் பொருட்டு பாடப்படும் "நலந்தானா" பாடலும் இன்றுவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.

கதையின் நாயகனான சிக்கல் சண்முக சுந்தரம் என்ற பெயருக்கு ஏற்றார் போல கண்டிப்பான நாதஸ்வர கலைஞராக நம் சிவாஜி கணேசன் பின்னி பெடல் எடுத்திருப்பார். எம்.பி.என் சகோதரர்களான சேதுராமன் மற்றும் பொன்னுச்சாமியின் ஒரிஜினல் நாதஸ்வர இசைக்கு திரையில் சிறுதும் பிசுறு தட்டாமல் உயிர் கொடுத்திருப்பார்.

நாட்டியம் சம்பந்தமான படம் என்றாலே பத்மினியை தவிர்க்க முடியாது என்றே சொல்லலாம். திருமணம் முடிந்த கையோடு பத்மினி நடித்த முதல் திரைப்படம். இந்த படத்திற்கான கடினமான பயிற்சி எடுத்து விருதினையும் தட்டிச்சென்றார்.

பன்முக கலைஞர் பாலையா தவில் வித்துவானாகவும், நட்டுவாங்கமாக தங்கவேலுவும், புதிய முயற்சியாக வில்லன் கதாப்பாத்திரத்தில் போட்டுக்கொடுக்கும் வேலையை வைத்தியாக நாகேஷும், தங்கள் வேலைகளை செவ்வனே செய்திருப்பார்கள்.

இப்பேர் பெற்ற படத்திற்கு பாடல் வரிகளை எழுத, கண்ணதாசனை விட்டால் வேறு எவரும் இலர். காதலுக்கான நலந்தானா பாடலை எழுதிய கவிஞர் மனோரமாவிற்காக "பாண்டியன் நானிருக்க" என்னும் டம்பாங்குத்து பாடல் எழுதி பரவசப்படுத்தி இருப்பார்.

1969 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதும், நடனத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. அது மட்டுமின்றி தமிழக அரசின் 5விருதுகளையும் தட்டிச்சென்றது.

யூடியூப் மற்றும் இதர இணையங்களில் முழு திரைப்படங்களும் கிடைத்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் போது இனம் புரியாத மகிழ்ச்சி வருவதனை மட்டும் தவிர்க்க முடிவதில்லை.



காலத்தினை வென்ற இக்காவியத்தினை முடிந்தால் பார்த்து மகிழவும்!!!

#thillana_mohanambal